செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல்
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை அண்மையில் அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் தற்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இவருக்கு புழல் சிறையில் கைதிக்கான எண் கொடுக்கப்பட்டுள்ளதோடு, மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்பும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 இலக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்று தமிழகஅரசு அறிவித்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார்.
அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்
இதற்கு பல தரப்புகளிலிருந்து ஆளுநருக்கு எதிர்ப்புகள் வந்த நிலையில், இவ்விவகாரம் அமித்ஷாவிற்கு தெரியவந்தது. அப்போது,அவர் ஆளுநரை தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக்கேட்டு முடிவெடுக்குமாறு அறிவுத்தியுள்ளார். இதன்பின்னர் தனது உத்தரவினை நிறுத்திவைப்பதாக தெரிவித்த ஆளுநர், அமித்ஷா கூறியபடி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்துக்கேட்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வெங்கட்ரமணி தற்போது கேரளாவில் உள்ளார், வரும் திங்கட்கிழமைத்தான் டெல்லிக்கு வருவார் என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆளுநர்,தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுகளின் விதிமுறைகள் உள்ளிட்ட விவரத்தினை ஓர் கடிதமாக எழுதி வெங்கட்ரமணிக்கு அனுப்பிவைத்துள்ளார். வரும் திங்கள் அந்த கடிதத்தின் மீதான தனது கருத்தினை அட்டர்னி ஜெனரல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் தான்,ஆளுநர் எடுத்த முடிவினை நிரந்தரமாக திருப்பி பெறுவாரா இல்லையா?என்பதும் தெரிவிக்கப்படும்.