செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை எதிர்த்து, அவரது மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நிஷா பானு மற்றம் பரத சக்கரவர்த்தி ஆகிய இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். ஆனால், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த மனு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயனுக்கு மாற்றப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்று அவர் அண்மையில் தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமே தவிர, தடை கோர முடியாது என்றும் கூறியிருந்தார்.
வரும் 24ம்தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணை
அதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜி சிகிச்சையிலுள்ள நாட்களை அமலாக்கத்துறை விசாரணைக்கான காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி, அவர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை அண்மையில் சந்தித்து பேசுகையில், "வரும் 24ம்தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணை வருகிறது. அப்போது இவர் சம்பந்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் அனைத்தும் அங்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில், 'இந்த வழக்கில் தங்கள் கருத்துக்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது' என்று குறிப்பிட்டு கேவியட் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.