மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி - செப்டம்பர் 15ம்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை நீதிமன்ற அனுமதியோடு 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றோடு(ஆகஸ்ட்.,28) நிறைவுபெறும் பட்சத்தில், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது - சிறப்பு நீதிமன்ற நீதிபதி
சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து அடுத்த காவல் நீடிப்பிற்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகவேண்டியதில்லை, காணொளி காட்சி மூலம் ஆஜரானால் போதுமானது என்றும் கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அந்த மனுவினை விசாரிக்க முடியாது என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவினை தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.