LOADING...
"அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்...": EPS க்கு கேடு விதித்த செங்கோட்டையன் 
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தல்

"அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்...": EPS க்கு கேடு விதித்த செங்கோட்டையன் 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 05, 2025
12:14 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், "இல்லையெனில், நான் முயற்சி எடுக்கத் தயார்" எனத் தெளிவாக தெரிவித்தார். "தேர்தல் வெற்றிக்கு, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு மறப்போம் மன்னிப்போம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்ற வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை அரவணைக்க வேண்டும்." எனவும் அவர் வலியுறுத்தினார். பேட்டியின் போது அவர் EPS பெயரை குறிப்பிடாமல் இந்த கருத்துகளை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக

அதிமுகவின் அரசியல் வரலாறு பற்றி செங்கோட்டையன்

செங்கோட்டையன் கூறுகையில், "1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். 1975-ல், எம்ஜிஆர் என்னை கோவை பொதுக்குழுவில் பொருளாளராக நியமித்தார். எனது பணியை அவர் நேரில் பாராட்டியுள்ளார். என் பெயரை சொன்னாலே மக்கள் ஓட்டு போடுவார்கள் என அவர் நம்பினார்" என நினைவு கூர்ந்தார். அதேபோல், ஜெயலலிதா தலைமையை பற்றியும் பெருமிதத்துடன் கூறினார். "அவருக்குப் பின்னர் ஆளுமைமிக்க, மக்கள் செல்வாக்குள்ள ஜெயலலிதாவே கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஜெயலலிதாவும் சிறந்த முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சி 5 முறை அமைந்தது. ஆன்மிகவாதி, திராவிடவாதிகளால் போற்றப்பட்டார்". "அவரது மறைவுக்குப் பின்னர் இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தன. அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம்" என்றார்.

எச்சரிக்கை

இப்போது கட்சி சிதறும் நிலை என எச்சரித்த செங்கோட்டையன் 

"இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வந்தபோதும் நான் தடுமாற்றமே இல்லாமல் திறம்பட பணியாற்றியுள்ளேன். அதற்காக ஜெயலலிதா என்னைப் பலமுறை பாராட்டியுள்ளார். நெடும் பயணத்தை மேற்கொள்ளும் போது பொறுப்புகள் கிடைக்கும், சோதனைகளும் வரும்". "தமிழகம் எப்படி இருக்க வேண்டும். தமிழக மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும் என்பதற்காக நான் தியாகம் செய்தேன். எனக்கு கட்சியில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தபோதும், இயக்கத்துக்காக தியாகம் செய்தேன்". "2016-க்குப் பிறகு தேர்தல் களத்தை அதிமுக சந்தித்திருக்கிறது. 2019, 2021 தேர்தல், 2024 தேர்தல், பின்னர் உள்ளாட்சித் தேர்தல் சந்தித்தபோது களத்தில் பல பிரச்சினைகள் நடந்தது".

ஒன்றிணைக்க வேண்டும்

"மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணம் வேண்டும்"

"அதிமுக தேர்தல் களத்தில் வெற்றிகரமாக இருக்க முன்னாள் முதல்வர் கொண்டிருந்த மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணம் வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லும்போது அவர்களை அரவணைக்க வேண்டும்". "இதுவே எனது கோரிக்கை. இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் நான் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துகளைக் கொண்டவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன். ஒன்றுபடாமல் நாளை அதிமுக ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடியாது." என்று செங்கோட்டையன் கூறினார்.