உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்ததால், டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சுடுகாடுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாற்காலிமாக மூடப்பட்டுள்ளது. எனினும், நேற்று இரவு 208.66 ஆக இருந்த யமுனையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 208.46 மீட்டராக குறைந்துள்ளது. இன்று மதியம் 1 மணிக்குள் யமுனையின் நீர்மட்டம் 208.30 மீட்டர் வரை குறையும் என்று மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது. டெல்லியின் இந்திரபிரஸ்தா அருகே உள்ள நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு சொந்தமான ரெகுலேட்டர் சேதமடைந்ததால் ஐடிஓ மற்றும் ராஜ்காட்டில் உள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.
ரெகுலேட்டர் சேதத்தால் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு
ரெகுலேட்டர் சேதத்தால் ஏற்பட்ட பிரச்சனையை முன்னுரிமையின் அடிப்படையில் தீர்க்க தலைமை செயலாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த சேதத்தை சரிசெய்ய இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்று இந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட இருக்கிறார். டெல்லியின் மையத்தில் அமைந்துள்ள திலக் மார்க் பகுதியும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் உச்ச நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்டையில், பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, யமுனை நதி பிரச்சனை எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமிஷாவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.