கடும் மழை எதிரொலி: நெல்லையில் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழையினால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல வீடுகளில், அலுவலகங்களிலும் வெள்ளநீர் புகுந்ததால் உடமைகள் பல சேதமாயின. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சுற்றி வெள்ளநீரும், ஆற்று நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள மக்களை, படகுகள் மூலம் காப்பாற்றி வருகின்றனர். அதோடு, ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், அம்மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு, ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
இன்று திறக்கவிருந்த பள்ளிகள்
வரலாறு காணாத கனமழை பெய்த காரணத்தால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதோடு தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. எனினும், இன்று முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தவிர, மற்ற வகுப்பு மாணவர்கள், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கூறி இருந்தார். இந்த சூழலில், நேற்று இரவு சிறிது நேரம் மீண்டும் மழை பெய்ததுள்ளது. அதனால், தற்போது கல்வித்துறை அமைச்சர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.