உணவு இடைவேளையிலும் வெளியே போகக் கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரம் மற்றும் உணவு இடைவேளையின் போது எக்காரணம் கொண்டும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளில் இருப்பதில்லை எனத் தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்நடவடிக்கை முடுக்கப்பட்டுள்ளது. பள்ளி இயங்கும் நேரங்கள் மட்டுமின்றி, மதிய உணவு இடைவேளையின் போதும் ஆசிரியர்கள் வளாகத்தை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே செல்வதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் பாதுகாப்பு
மாணவர் பாதுகாப்பும் கண்காணிப்பும்
மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் வெளியில் சென்றுவிடுவதால், மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் அசம்பாவிதங்களைக் கண்காணிக்க முடியாமல் போவதாகப் புகார்கள் எழுந்தன.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வேலை நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருப்பதை உறுதி செய்யவும் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் பள்ளிகளில் ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் அல்லது சச்சரவுகள் ஏற்பட்டால், தலைமையாசிரியர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது.
உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.