நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா-கீரம்பூரில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் சமூகஅறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் பன்னீர் செல்வம். இவர் மாணவிகளை தனது செல்போனில் ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்து, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியநிலையில் நேற்று(ஏப்ரல்.,12) காலை 50க்கும்மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு முன் முற்றுகையிட்டு அந்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளித்தலைமை ஆசிரியர் சர்மிளா பாதுகாப்பு கருதி ஆசிரியர் பன்னீர் செல்வத்தை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
பள்ளி கேட்டை மூடி மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
இதனைதொடர்ந்து பரமத்தி போலீசார் அங்கு விரைந்து வந்துள்ளார்கள். மேலும் அம்மாவட்ட எஸ்.பி.மணிமாறன், டிஎஸ்பி கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில் திரண்டிருந்த பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பெற்றோர்கள் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவயிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி, பள்ளியின் கேட்டை மூடி மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். அதன்பின்னர், போலீசார் ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னரே, ஆசிரியரை கைதுசெய்து அழைத்து சென்ற போலீஸ் வாகனத்திற்கு அங்கிருந்தோர் வழி விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.