கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?
செய்தி முன்னோட்டம்
கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல் புளியங்குடி கிராமத்தில் வசித்து வரும் வீரமணி என்பவரது மகன் ஜீவா.
இவர் விருத்தாசலத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
அதேபகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் ஆனந்த், பி.இ.,பட்டதாரி.
இவர் தற்போது படிப்பினை முடித்துவிட்டு மின்சார வாரியத்தில் ஒப்பந்தத்தில் பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று(அக்.,3) காலை ஜீவா பள்ளி செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற ஆனந்த், தனியாக பேச வேண்டும் என்று கூறி ஜீவாவை ஓடையோரம் அழைத்து சென்றுள்ளார்.
கொலை
8 இடங்களில் கத்தியால் குத்திய வாலிபர் தப்பியோட்டம்
அங்கு இவர்களுக்கு வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜீவாவை ஆனந்த், தான் வைத்திருந்த கத்தியால் 8 இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.
கத்திக்குத்து வாங்கிய ஜீவா, குடல் சரிந்து பரிதாபமாக சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்தோர் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர், ஜீவாவின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையின் காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், இதன் முதற்கட்ட விசாரணையின் படி, ஜீவாவை ஆனந்த் ஓரின சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.