26 வார கருவை கலைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
26 வார கருவை கலைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய பெண்ணின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதோடு, பெண்ணின் பேறுகால மருத்துவ செலவுகளை, மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பின் பின்கதை: ஒரு பெண், தனது 26-வாரக்கருவை கலைக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அனுமதியளித்து கடந்த 9ம்தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை திரும்பப்பெற கோரி, மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணையின் இறுதியில், பல திருப்பங்களுக்கு இடையே, உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க வேண்டி வழக்கு
முன்னதாக, 'தனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தன்னால் இந்த 3வது குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடியாது. மேலும் தனக்கு மனஅழுத்தமும் உள்ளதால் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் கூறி தான் வழக்கை தொடுத்துள்ளார் ஒரு பெண்மணி. இதற்கு, உச்சநீதிமன்ற பெஞ்ச் அனுமதியளித்து உத்தரவிட்ட நிலையில், அதன் மீது மத்திய அரசு மேல்முறையீடு செய்ய, இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
கருக்கலைப்பு செய்ய உச்சபட்ச வரம்பு, 24 வாரங்களாகும்
மருத்துவக் கருச்சிதைவு (எம்டிபி) சட்டத்தின் கீழ், 24 வாரம் வரையில் தான் கருக்கலைப்பு செய்ய முடியும். அதிலும், கற்பழிப்பில் இருந்து தப்பியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மைனர்கள் போன்ற பிற பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு சிறப்பு பிரிவின் கீழ், கர்ப்பத்தை முடிப்பதற்கான உச்ச வரம்பு 24 வாரங்களாகும். எனவே இந்த வழக்கில், அதையும் தாண்டி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், குழந்தைக்கு இதய துடிப்பும் சீராக இருப்பதாக AIIMS மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், இந்த நிலையில் கருக்கலைப்பு செய்தால், அது, குழந்தையை கொல்வதற்கு சமம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இந்த மருத்துவ அறிக்கையை கருத்தில் கொண்ட நீதிபதிகள், கர்ப்பத்தின் காலம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுத்தது. மேலும் இந்த கர்ப்பம் அந்த தாய்க்கு எந்தவித உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், மேலும் இந்த வழக்கு கருவின் வளர்ச்சியின்மை சார்ந்தது அல்ல என்பதால், இந்த வழக்கை இத்துடன் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், பிறக்கவிறுக்கும் குழந்தையை தத்தெடுப்பதற்கு கொடுப்பதா வேண்டாமா என்பதை பெண்ணின் பெற்றோர்கள் முடிவு செய்யலாம். மேலும், பேறுகாலம் முடியும் வரை, எய்ம்ஸில் அந்த பெண் சிகிச்சை பெறுவார் என்று அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான மருத்துவ சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளது