ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
370வது சட்ட பிரிவை (Article 370) நீக்கி ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் 2019 முடிவு செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (டிசம்பர் 11, 2023) தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னதாக 16 நாட்கள் நீடித்த குறுக்கு விசாரணையைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பூஷன் ஆர் கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இரண்டு வித தீர்ப்புகள் மட்டுமே சாத்தியம்
இந்த வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகள் வெளியாகக்கூடும். ஒன்று, அரசின் முடிவு செல்லும் என்பது, அல்லது அரசின் முடிவு மக்களுக்கு எதிரானது என்பது. எனினும் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ள தீர்ப்பா என்பதும், அதன் பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பலரும் இன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள்! மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மீண்டும் இந்தாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கியது.
விசாரணையின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள்
நிரந்தரத் தன்மை இந்த விவகாரத்தின் இறுதிக்கட்ட விசாரணையில், சட்டப்பிரிவு 370ன் நிரந்தரத் தன்மை மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்து வலியுறுத்தும் மனுதாரர்களின் விரிவான வாதங்கள் இடம்பெற்றது. இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கான இறுதி படி இதனை எதிர்த்து வாதிட்ட மத்திய அரசும் மற்றும் பிற எதிர்மனுதாரர்களும், இந்த சட்டப்பிரிவு 370 ஏற்பாடு எப்போதுமே தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்றும், அதை ரத்து செய்வதே ஜம்மு-காஷ்மீரை, இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கான இறுதி படியாகும் என்றும் வலியுறுத்தினர். அரசியலமைப்பு வாக்குறுதி நேஷனல் கான்பரன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காஷ்மீர் குடிமக்கள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய மனுதாரர்கள், 370வது பிரிவு சுதேச அரசுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு வாக்குறுதியின் உருவகம் என்றும் வாதிட்டனர்.
மத்திய அரசின் பதில்
சிறப்பு அந்தஸ்து கோரும் மனுதாரர்களின் வாதத்தை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மத்திய அரசின் சார்பாக வாதாடினர். அவர்கள் கூறியதாவது 370 வது பிரிவு என்பது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான உருவகம் அல்ல என்றும், இந்தியா நாட்டுடன் 'முழுமையான ஒருங்கிணைப்பு'க்கான 'தற்காலிக' ஏற்பாடு மட்டுமே என்றும் கூறினர். அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் இணைவதற்காக காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜா ஹரி சிங்கால் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டு அறிக்கை என்பது, முற்றிலும் ஒரு அரசியல் நடவடிக்கை என்றும், 370வது பிரிவு "நிலைமையை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கும், ஜம்மு காஷ்மீரில் ஒருங்கிணைப்பு செயல்முறையை முடிக்க ஒரு நீடித்த கால அவகாசம் மட்டுமே" என்றும் அவர்கள் கூறினர்.
எதிர்கால திட்டங்கள்: தேர்தல்கள் மற்றும் மாநில அந்தஸ்து
விசாரணையின் முடிவில், அரசியலமைப்பு பெஞ்ச், ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான காலக்கெடு எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டது. எனினும் அந்த கேள்விக்கு, உறுதியான பதில் எதுவும் கூறாமல், மத்திய அரசு தவிர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஜே & கே யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் பற்றி மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையங்கள் முடிவெடுக்கும் போதெல்லாம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறியது. ஜே&கே இன் யூனியன் பிரதேச அந்தஸ்து "தற்காலிகமானது" என்று மீண்டும் வலியுறுத்தியது.