'தனி மரம் தோப்பாகாது!' சசிகலாவின் புதிய சின்னம் தென்னந்தோப்பு! அதிமுக தொண்டர்களுக்கு விடுத்த அழைப்பு என்ன?
செய்தி முன்னோட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சசிகலா தலைமையிலான கட்சியின் பெயர் 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' (அஇபுதமமுக) என்பதாகும். வரும் சட்டசபை தேர்தலில் இந்தக் கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
முக்கிய அறிவிப்பு
சசிகலாவின் முக்கியப் பேச்சுகள்
எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட போது ஒரு தொண்டர் பதிவு செய்த கட்சியைத் தான் அவர் வழிநடத்தினார். அதே பாணியில், ஒரு தொண்டர் தொடங்கிய கட்சியில் தன்னைப் பிணைத்துக் கொண்டதாகச் சசிகலா தெரிவித்தார். தங்களுக்குக் கிடைத்துள்ள சின்னத்தில் 4 தென்னை மரங்கள் உள்ளன. இது ஒற்றுமையின் அடையாளம் எனக் குறிப்பிட்ட அவர், "தனி மரம் தோப்பாகாது" என்ற பழமொழிக்கு ஏற்ப, கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கப் போவதாகக் கூறினார். "திமுக எனும் தீய சக்தியை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எனது முதன்மை நோக்கம். தற்போதைய ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை," என சசிகலா விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, தேர்தல் முடிவுகளின் போது அவர் சாதித்தாரா இல்லையா என்பது தெரியும் என்று காட்டமாக பதிலளித்தார்.
பின்னணி
பின்னணி
கடந்த பிப்ரவரி 24 (ஜெயலலிதா பிறந்தநாள்) அன்று கமுதியில் நடைபெற்ற மாநாட்டில் சசிகலா புதிய கொடியை அறிமுகப்படுத்தியிருந்தார். புதிய கட்சி தொடங்கப் பல மாதங்கள் ஆகும் என டிடிவி தினகரன் விமர்சித்திருந்த நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் மூலம் சசிகலா தற்போது தனது அரசியல் பயணத்தைத் துரிதப்படுத்தியுள்ளார். சசிகலாவின் இந்த வருகை அதிமுக வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.