சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. TMC தலைவர்களால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று புகாரளித்த ஒரு பெண் தற்போது கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, உள்ளூர் பாஜக உறுப்பினர்கள், தங்களை ஒரு வெற்று காகிதத்தில் கையெழுத்திட வற்புறுத்தி, அதில் போலி புகார் எழுதப்பட்டு, அதுவே மகளிர் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சந்தேஷ்காலி விவகாரத்தில் முன்னாள் டிஎம்சி தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பாஜக உறுப்பினர்களால் வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
உள்ளூர் பாஜக மகிளா மோர்ச்சா நிர்வாகி மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் தங்களது வீட்டிற்குச் வந்து வெற்றுத் தாளில் கையெழுத்திடச் சொன்னதாக அந்தப் பெண்கள்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் என் பெயரைச் சேர்ப்பதற்காக, என் கையொப்பத்தைக் கேட்டார்கள். பின்னர், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக புகார் அளிக்க என்னை...காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்," என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறினார். பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டை வாபஸ் பெற்றதால், அச்சுறுத்தல்கள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்றவற்றை மேற்கோள் காட்டி, சந்தேஷ்காலி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புதிய புகார் ஒன்றையும் தற்போது பதிவு செய்துள்ளார்.