சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்
சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து அவர், இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணி என்ன? என்பதனை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று(செப்.,22) உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
சனாதன சர்ச்சை குறித்து விசாரணை மேற்கொள்ள விருப்பமில்லை - நீதிபதிகள்
அப்போது, சனாதனம் குறித்த சர்ச்சை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கினை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடாமல், நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணம் என்ன? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளான பேலா திரிவேதி மற்றும் அனிருத்தா போஸ் மனுதாரரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை என்று கூறிய நீதிபதிகள், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சனாதன எதிர்ப்பு பேச்சு குறித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.