சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் vs தமிழக துணை முதல்வர் உதயநிதி
சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் யாரை குறிக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும், Let's wait and see" என தெரிவித்தார். நேற்று, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில், "சனாதனம் ஒரு வைரஸ் போல, அதை ஒழிப்போம் என்று தமிழ்நாட்டில் ஒரு நாயகர் (இளம் தலைவர்) சொல்கிறார். திருப்பதி பெருமாள் முன்னிலையில் சொல்கிறேன், சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவர்" என மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை குறிக்கவே பேசினார்.
சனாதன தர்மம் குறித்து பேசி சர்ச்சையை தூண்டிய உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார். மேலும் பேசிய அவர் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் என பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
பவன் கல்யாணின் பேச்சு
இந்நிலையில் ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், நடைபயணமாக திருப்பதி மலைக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர்: இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள். எனவே தமிழில் கூறுகிறேன். அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன். சனாதன தர்மத்தை யாரவது அழிக்க நினைத்தால், கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன் நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது என்று பேசியுள்ளார்.