"பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்": 5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவர், நடிகர் சல்மான் கானுடனான நீண்டகால பகையைத் தீர்க்க ரூ. 5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார். நடிகர் சல்மான் பணம் செலுத்தத் தவறினால், அவரது கதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கியின் கதியை விட மோசமாக இருக்கும் என்று அந்தச் செய்தி எச்சரித்துள்ளது.
சல்மானுக்கு விடப்பட்ட மிரட்டல் செய்தி
"சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள், இல்லையெனில் சல்மான் கானின் நிலை பாபா சித்திக்யை விட மோசமாக இருக்கும்" என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை
சல்மான் கானின் நெருங்கிய நண்பரான என்சிபி தலைவர் சித்திக், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி மும்பையின் உயர்மட்ட பகுதியான பாந்த்ராவில் உள்ள அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய சதிகாரர் என்று சந்தேகிக்கப்படும் சுபம் லோங்கர், சித்திக் கொலைக்குப் பின்னால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக சமூக ஊடகங்களில் எழுதினார்.