டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய்
தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளும் பிரிவானது ரயில்களில் பயணம் செய்யும் மக்கள் பயணசீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய டிக்கெட் பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் என டிக்கெட் பரிசோதகர்கள் தங்கள் பணியினை அதிரடியாக செய்து வருகிறார்கள். இவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம், சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு முதல் வகுப்பில் பயணம் செய்வோர், டிக்கெட்டே இல்லாமல் பயணம் மேற்கொள்வோர் உள்ளிட்டோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, அக்.,15ம் தேதி வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேற்கூறப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் என 10.39 லட்சம் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் சென்னை ரயில்வே கோட்டம்
மேலும் தெற்கு ரயில்வே துறைக்கு, இதன் மூலம் ரூ.57.48 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. விதிக்கப்பட்ட அபராத தொகையின் விகிதங்கள் படி, சென்னை ரயில்வே கோட்டம், ரூ.21.92 கோடி வருவாயினை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் திருவனந்தபுரம் ரூ.8.72 கோடியும், பாலக்காடு கோட்டம் ரூ.8.32 கோடியும், சேலம் கோட்டம் ரூ.8.15 கோடியும், மதுரை கோட்டம் ரூ.5.41 கோடியும், திருச்சி கோட்டம் ரூ.4.90 கோடியும் பெற்று இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'இது போன்ற சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் பட்சத்தில், உண்மையான பயணிகளின் பயண அனுபவம் மேம்படும்' என்று தெரிவித்துள்ளனர்.