கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தீர்ப்பு எதிரான அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு; சிபிஐ மேல்முறையீடு ஏற்பு
செய்தி முன்னோட்டம்
ஆர்ஜி கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு-கொலை வழக்கின் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
முன்னதாக, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு மத்தியில் சிபிஐ வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
விசாரணை நீதிமன்றம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்திருந்தது.
எனினும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பலரும் தீர்ப்பு அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்க அரசு மற்றும் வழக்கை விசாரித்த சிபிஐ ஆகிய இருதரப்பும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சிபிஐ
சிபிஐ மேல்முறையீடு ஏற்பாடு
விசாரணை நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) ஏற்றுக்கொண்டது.
எவ்வாறாயினும், இந்த வழக்கில் ஒரே குற்றவாளியான ராய்க்கு வழங்கப்பட்ட தண்டனையின் அளவை எதிர்த்து மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை மறுத்துவிட்டது.
நீதிபதிகள் டெபாங்சு பாசக் மற்றும் எம்டி சப்பர் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிபிஐ விசாரணை நடத்தியதால், தண்டனையின் அளவை எதிர்த்து அதன் மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது என்று கூறியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இங்குள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்குள் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.