Loading...
ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டில் இலவசமாக படிக்கலாம்: தமிழக அரசின் மாபெரும் புதிய திட்டம், என்னென்ன நிபந்தனைகள்?
உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில் கல்வி பயில தமிழக அரசு முழு நிதியுதவி அளிக்க திட்டம்

ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டில் இலவசமாக படிக்கலாம்: தமிழக அரசின் மாபெரும் புதிய திட்டம், என்னென்ன நிபந்தனைகள்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
10:12 am

செய்தி முன்னோட்டம்

உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில சேர்க்கை பெறும் தமிழக மாணவர்களின் முழு கல்விக் கட்டணம் மற்றும் வெளிநாட்டு தங்கும் செலவுகளைத் தமிழக அரசே ஏற்கும் வகையிலான 'அறிவுக்கு மதிப்பு' என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. ஸ்டான்ஃபோர்ட், ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கவும், திறமைகள் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுத்து அவர்களின் திறமையை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

நிபந்தனை

3 ஆண்டுகள் தமிழகத்திற்கு சேவை செய்ய நிபந்தனை

இத்திட்டத்தின் கீழ் முழு நிதியுதவி பெறும் மாணவர்கள், தங்களது படிப்பை முடித்த பிறகு 3 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது.

மாணவர்கள் பின்வரும் மூன்று வழிகளில் இந்த நிபந்தனையை நிறைவேற்றலாம்

தமிழக அரசின் கொள்கை ஆலோசகர்களாகவோ அல்லது நிபுணர்களாகவோ பணியாற்றுதல்.

தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் விருந்தினர் பேராசிரியர்களாக பணியாற்றி மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.

மாநிலத்தில் புதிய நிறுவனங்களைத் தொடங்கி முதலீடுகளை ஈர்த்தல்.

விளக்கம்

உயர்கல்வித்துறை செயலாளரின் விளக்கம்

இத்திட்டம் குறித்துப் பேசிய உயர்கல்வித் துறைச் செயலாளர் தீரஜ் குமார், மாணவர்களுக்கும் அரசுக்கும் நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மாணவர்கள் மீது விதிக்கப்படும் நிபந்தனைகள் அவர்களுக்குச் சுமையாக மாறிவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாகவும், வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே இத்திட்டத்திற்கான தகுதி அளவுகோல், பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய தோராயமான கணக்கீட்டின்படி, தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 35,000 முதல் 40,000 மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

அவர்களில் சுமார் 5% முதல் 6% வரையிலான மாணவர்கள் உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுகின்றனர்.

ADVERTISEMENT