'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்!
இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம். e-ரூபியை கட்டணமுறையாக ஏற்றுக் கொள்ளும் இந்தியாவின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனமாக தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த சேவைக்காக எஸ் பேங்குடன் கைகோர்த்திருக்கிறது ரிலையன்ஸ் ஜெனரல். அவ்வங்கியின் e-ரூபி தளத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்த முடியும். எந்தவொரு வங்கியின் e-வாலட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் ரிலையன் ஜெனரலின் e-ரூபி QR கோடைப் பயன்படுத்தி உடனடியாகக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. e-ரூபியை ஏற்றுக்கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் பங்கெடுத்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் அறிமுகப்படுத்திய e-ரூபி:
இந்தியாவின் முதல் டிஜிட்டல் நாணயமாக e-ரூபியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஷ்வர் ஆகிய நான்கு நகரங்களில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃபிசி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் இணைந்த புதிய e-ரூபி சேவையைத் தொடங்கியது ரிசர்வ் வங்கி. இதுவரை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை இதர வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரிசர்வ் வங்கி. மேற்கூறிய நான்கு நகரங்களைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில், அகமதாபாத், கேங்டாக், கௌகாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் இந்த சேவை விரிவுபடுத்தவிருக்கின்றனர்.