வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்
வட இந்தியாவில் நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல நிலச்சரிவுகளும், பொருள் சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாலங்கள் அடித்துச் செல்லப்படுவதும், மழையினால் நிலச்சரிவு ஏற்படுவதும், வாகனங்கள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவதும் போன்ற பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பதிலேயே இமாச்சலப் பிரதேசத்திற்கு தான் இந்த கனமழையினால் அதிக அடி விழுந்திருக்கிறது. இமாச்சலில் மட்டும் இந்த கனமழையால் 31-பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலின் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று கசோல், மணிகரன், கீர் கங்கா மற்றும் புல்கா பகுதிகளில் வான்வழி ஆய்வு நடத்தினார்.
யமுனை நதியின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது
இந்த கனமழையால், இமாச்சலில் மட்டும் ரூ.3,000-ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த நான்கு நாட்களாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வியாழக்கிழமை வரை பயணம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.