மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறியை வடிவமைத்த நெசவாளரை கெளரவப்படுத்திய மத்திய அரசு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமானது. இந்த தொழிற்சாலையினை நம்பி 5,000க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளார்கள். இத்தகைய பாரம்பரிய கைத்தறியில் பல்வேறு புது கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர் சிறுமுகையினை சேர்ந்த நெசவாளரான காரப்பன் என்பவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி செய்து மாற்றுதினாளிகளும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் வகையில் ஒரு கை மற்றும் ஒரு கால் கொண்டு செயல்படும் வகையில் கைத்தறி ஒன்றினை வடிவமைத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை மூலம் பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு இந்த கைத்தறியினை அங்கீகரித்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் கண்காட்சி
மேலும் இந்த கைத்தறி அண்மையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெற்றது. அதனையடுத்து அதனை அங்கீகரித்ததோடு தற்போது விருது வழங்கப்பட்டு அந்த நெசவாளர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய நெசவாளர் காரப்பன், இந்த விருது நெசவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். நெசவுத்தொழில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் இந்த விருதுகள் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள இந்த நெசவு தொழிலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார். விவசாயம், டெக்ஸ்டைல்ஸ், கைவினை பொருட்கள் என பல துறைகளில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் வகையில் 2 ஆண்டிற்கு ஒரு முறை இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.