
ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.
லெஸ்பியன் தம்பதியினர் ஒருவர் தங்கள் உறவினர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக அங்கீகரிப்பதன் மூலம், LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அவர்கள் தொந்தரவு/துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் வாழ்வதையும் உறுதி செய்ய முடியும் என்று நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
நபிமவெல்ட்ஜ்
சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவு
"மனுதாரர் வழங்கி இருக்கும் இந்த ஆலோசனை/முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, அத்தகைய 'குடும்ப கூட்டணி பத்திரம்' மற்றும் அத்தகைய பத்திரத்தின் நோக்கம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான நடைமுறையை அரசு கொண்டு வரலாம்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
"அப்படிச் செய்தால், ஒரே பாலின உறவில் இருக்கும் நபர்களுக்கு அரசு ஒப்புதலை வழங்க முடியும். மேலும் இது அத்தகைய நபர்களின் அந்தஸ்தை பெரிய அளவிற்கு உயர்த்தும்." என்றும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே, குடும்ப கூட்டணி பத்திரங்களை பதிவு செய்வதற்கான முறையை பரிசீலிக்குமாறு சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
ஏற்கனவே இந்த துறை LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.