வெளிநாடு செல்பவர்களுக்கு இனி கவலையில்லை! விமான நிலையத்தில் கடைசி நிமிடத்திலும் பணத்தை மாற்றலாம்
செய்தி முன்னோட்டம்
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியப் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சிக்கலான விதிகளை மாற்றி, இனி சர்வதேச விமான நிலையங்களில் இமிக்ரேஷன் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்த பிறகும், கையில் உள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டுச் செலாவணியாக(Forex) மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம், கடைசி நிமிடத்தில் பணத்தை மாற்ற மறந்த அல்லது கூடுதல் பணம் தேவைப்படும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
வசதி
இனி இமிக்ரேஷன் தாண்டி Forex வசதி
பொதுவாக, இந்தியப் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு 'Duty-free' அல்லது 'ecurity Hold' ஏரியாவுக்கு சென்ற பிறகு, அங்குள்ள ஃபாரெக்ஸ் கவுண்டர்களில் இந்திய ரூபாயைக் கொடுத்து வெளிநாட்டுப் பணத்தைப் பெற முடியாது. அங்கிருக்கும் கவுண்டர்கள் வெளிநாட்டினரிடம் இருந்து மட்டுமே இந்திய ரூபாயை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால், இப்போது இந்திய குடிமக்களும் இமிக்ரேஷன் டெஸ்க்கை தாண்டிய பிறகு தங்களது ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ஆர்.பி.ஐ தனது புதிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
கவனிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள்
பணத்தை மாற்றுவதில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தாலும், ரொக்கமாகக் கொண்டு செல்வதில் சில கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றன: ஒரு பயணி அதிகபட்சமாக ரூ. 25,000 வரை மட்டுமே ரொக்கமாகக் கொண்டு செல்ல முடியும். அதற்கு அதிகமான தொகையைக் கொண்டு செல்ல நேரிட்டால், சுங்கத்துறையிடம் முறைப்படியாகத் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். இந்த வசதி இந்தியாவின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் உள்ள புறப்பாட்டு அரங்குகளில் அமல்படுத்தப்பட உள்ளது.