விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, 17 ஆம் தேதி என கருதப்பட்ட இந்த திருவிழா, செப்டம்பர் 18 ஆம் தேதியாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசும் அந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, சில நாட்களுக்கு முன்னர் அரசாணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு. அதன்படி, வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும், பொதுமக்கள் அதற்கேற்றாற் போல தங்கள் பொருட்களை வாங்கி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள்
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே சிலைகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி தரப்படும். சிலைகளின் ஆபரண அணிகலன்களாக உலர்ந்த இயற்கையான மலர் மாலைகளோ, வைக்கோல் போன்றவையோ பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் மாலைகள் பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது, இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். அதேபோல, சிலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.