8 வயதில் உலகையே வியக்க வைத்த இந்திய சிறுவன்! ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் கலக்கிய ரன்வீர் சச்தேவா
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), 8 வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சர்வதேச மாநாட்டின் மிக இளைய முக்கிய பேச்சாளர் என்ற பெருமையை ரன்வீர் பெற்றுள்ளார். "இந்தியாவின் பண்டைய தத்துவங்களை நவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைப்பது எப்படி?" என்பது குறித்து அவர் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த உலக நாடுகளின் பிரதிநிதிகளை வியப்பில் ஆழ்த்தியது.
ஏஐ மாடல்
ரன்வீரின் ஏஐ மாடல் மற்றும் இந்தியாவின் ஜிடிபி
தனது உரையில், தான் உருவாக்கியுள்ள புதிய இந்திய ஏஐ மாடல் குறித்தும், அது எப்படி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவும் என்பது குறித்தும் ரன்வீர் விளக்கினார். "நான் வெறும் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, இந்திய ஏஐ கல்வியறிவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எப்படிப் பங்களிக்கிறேன் என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று அவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார். ஒரு 8 வயது சிறுவன் பொருளாதாரத் தாக்கம் குறித்துப் பேசுவது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
ஐநா சபை
ஐநா சபை மற்றும் டிம் குக் உடனான சந்திப்பு
ரன்வீர் சச்தேவா இதற்கு முன்பே பல உலகளாவிய சாதனைகளைப் படைத்துள்ளார்: 2025 இல் தனது 7 வது வயதில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநாவின் 'AI for Good' மாநாட்டில் 10,000 பேருக்கு முன்னால் உரையாற்றினார். அங்கு ஏஐயின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். 2023 இல் ஆப்பிள் சிஇஓ டிம் குக் டெல்லி வந்தபோது, ரன்வீரின் கோடிங் திறமையைப் பார்த்து வியந்து, அவரை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்திற்கு நேரடியாக அழைத்தார். மேலும், தனது 7 வயதிலேயே ஐஐடி டெல்லியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏஐ சான்றிதழ் பெற்று, மிக இளைய வயதில் இச்சாதனையைப் படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
மாற்றம்
இளைய தலைமுறையின் மாற்றம்
ஆரோக்கியம் மற்றும் மருத்துவத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் எப்படி ஊனமுற்றோருக்கான பயோனிக் தீர்வுகளை வழங்குகிறது என்பது குறித்து ரன்வீர் ஆழ்ந்த அறிவைக் கொண்டுள்ளார். 6 வயதில் டெட்-எக்ஸ் பேச்சாளராகத் தொடங்கி, இன்று உலகத்தரம் வாய்ந்த ஏஐ மாநாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ரன்வீர், இந்தியாவின் ஏஐ தலைமுறை உலகிற்குத் தலைமை தாங்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் புகழ்கின்றனர்.