பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்
மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வெடிகுண்டு வைத்த குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அறிவித்துள்ளது. குற்றவாளியின் முகத்துடன் கூடிய 'வான்டெட்' போஸ்ட்டரை வெளியிட்டுள்ள என்ஐஏ, தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் சந்தேக நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
விசாரணையை மேற்கொள்ள என்ஐஏவுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்
அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வைராகி வருகிறது. ஆனால், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மத்திய குற்றப்பிரிவு மற்றும் என்ஐஏ ஆகிய இரண்டு ஏஜென்சிகளை சேர்ந்த அதிகாரிகளும் சந்தேக நபரை தேடி வருகின்றனர். கர்நாடக அரசு விசாரணையை மத்திய ஏஜென்சியிடம் ஒப்படைக்காததால், விசாரணையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து, என்ஐஏ நேற்று தனது விசாரணையைத் தொடங்கியது. நகர காவல்துறைக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், சந்தேக நபரை காவல்துறையினர் பிடித்துவிடுவர் என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா இன்று கூறினார். இந்நிலையில், தற்போது, குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்துள்ளது.