ஆருத்ரா தரிசனம்: ராமநாதபுரத்தில் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
செய்தி முன்னோட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திருவிழாவின் போது மட்டும் தான் இங்குள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலையிலிருந்து சந்தனக் காப்பு அகற்றப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நாள்
ஈடுசெய்யும் வேலை நாள்
ஜனவரி 2 ஆம் தேதி அளிக்கப்பட்டுள்ள இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 10 ஆம் தேதி (சனிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறைகளையும் சேர்த்துத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பது அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய துறைகள்
முக்கியத் துறைகள் இயங்கும்
இந்த விடுமுறை நாளிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை 'செலாவணி முறிச்சட்டம் 1881' இன் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இது பொருந்தாது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும்.