அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களை ஏமாற்றும் வகையில் நடக்கும் QR குறியீடுகள் மோசடி குறித்து வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிலின் கட்டுமானத்திற்காக நன்கொடைகள் கேட்டு சிலர் சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை பரப்புவதாகவும், ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் QR குறியீட்டை அவர்கள் அனுப்புவதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது. VHP செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், இது குறித்து உள்துறை அமைச்சகம், டெல்லி காவல்துறை மற்றும் உ.பி காவல்துறை ஆகிவற்றிடம் புகார் அளித்துள்ளார்.
மக்கள் யாரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அமிதாப் பச்சன், முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உட்பட 8,000 பேர் இந்த திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திறப்பு விழாவின் பெயரை சொல்லி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. ராமர் கோவிலின் கட்டுமான பொறுப்புகளை எடுத்து நடத்தும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, நிதி வசூலிக்க யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.