'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்
இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 77வது சுதந்திர தினத்தை ஒட்டி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) ஆல் இந்தியா ரேடியோ மூலம் ராணுவ வீரர்களுக்கு அவர் வழங்கிய வானொலி உரையில் இதை தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தனது உரையில், "நாங்கள் அமைதியை விரும்புவது மட்டுமல்லாமல், எங்கள் செயல்களின் மூலம் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம், யாரேனும் எங்களை தவறான நோக்கத்துடன் அல்லது விரோதத்துடன் பார்க்கத் துணிந்தால், எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்." என்று கூறினார்.
நவீனமயமாகும் இந்திய ராணுவம் : ராஜ்நாத் சிங்
எதிர்காலச் சவால்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் வகையில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சிறந்த பயிற்சியுடன் ஆயுதப் படைகளை நவீனப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும், புதிய வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப புதிய கிளைகள் மற்றும் பிரிவுகள் பாதுகாப்புப் படைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார். ராணுவம் இந்த ஆண்டு முதல் முறையாக பீரங்கி படைப்பிரிவில் பெண் அதிகாரிகளை இணைத்துள்ளதாகவும், நாட்டின் திறமையான மகள்களை சைனிக் பள்ளிகளில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். முடிவாக, நாட்டின் எந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும், 140 கோடி இந்தியர்களின் இதயங்களிலும் ராணுவ வீரர்கள் இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.