சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி
சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஓர் அதிரடி திட்டத்தினை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. அது என்னவென்றால், ஒருவருக்கு சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றுள் 10 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் இருந்தால், அவருக்கு அரசின் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, சமூக வலைத்தளங்களில் 10 ஆயிரத்திற்கு மேல், லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் கொண்டுள்ள சமூக ஊடகவியலாளர்களை நேரில் அழைத்து, அவர்களது இணையதள பக்கத்தில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளம்பரங்களை போடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் ராஜஸ்தான் அரசு ஒரு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள் வருவாயினை பெருக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம்
அந்த அறிக்கையில், ஃபாலோயர்களை அடிப்படையாக வைத்து, சமூக ஊடகவியலாளர்களால், ஒரு மாதத்திற்கு நிச்சயம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை தங்களுக்கான வருவாயினை ஈட்டமுடியும். சமூக ஊடகங்களுக்கு பணமில்லாமல் விளம்பரங்களை கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது குறித்து பலதரப்பில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இளைஞர்கள் வருவாயினை பெருக்கும் வகையில் இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைமூலம், 10 ஆயிரத்திற்கு மேல் ஃபாலோயர்கள் கொண்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ராஜஸ்தான் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த திட்டத்தின்படி, 10 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.