ஒரு மணி நேரத்தில் சென்னையில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 'கடந்த 3 நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இதுவரை 11 செ.மீ.,மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. எனினும், தேங்கிய மழைநீர் அனைத்தும் ஒரு மணிநேரத்தில் அகற்றப்பட்டது' என்று கூறினார். தொடர்ந்து, சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
வடிகால் பணிகள் 98% நிறைவடைந்துள்ளதாக தகவல்
மேலும் அவர், சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் மழைநீர் தேங்கினாலும் அதனை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதேபோல் சென்னையில் மேற்கொண்டுள்ள வடிகால் பணிகள் 98% நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 2% பணியும் விரைந்து முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். மழையில் மரங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை நீக்கும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்து வந்த சாலை பணிகள் யாவும் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.