தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு
தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் கனமழை பெய்துவரும் நிலையில் எம்.பி.கனிமொழி, தூத்துக்குடியில் கனமழை காரணமாக அம்மாவட்ட மக்களின் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உதவிகளை செய்துவரும் நிலையில், மருத்துவம், உணவு உள்ளிட்ட அவரச தேவைக்கான உதவிக்கு 80778 80779 என்னும் எண்ணின் வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்புக்கொள்ளலாம் என்றும், தன்னார்வலர்கள் விரும்பினால் இச்சேவையில் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் அம்மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி பேரிடர் கட்டுப்பாட்டு மைய எண்.1077க்கும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மைய எண்.1070க்கும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மக்கள் அவசர தேவைக்காக தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
4 மாவட்ட மக்களுக்கும் அவரச உதவி எண்கள் அறிவிப்பு
மேலும், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னக உதவிஎண்.9445854718 என்னும் எண்ணுக்கு தொடர்புக்கொள்ளலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி மக்களுக்கான அவசர உதவிக்கு 04622501012 என்னும் உதவி எண்ணுக்கும், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அவசர உதவிக்கு 04652231077-என்னும் எண்ணுக்கும், தென்காசி மக்கள் 04633290548 என்னும் எண்ணுக்கும் தொடர்புக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி கயத்தாறு-தேவர்குளம் சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை வழியே கயத்தாறு செல்லும் வழியிலுள்ள பாலங்கள் நிரம்பியுள்ள காரணத்தினால் அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இந்த 4 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று(டிச.,18)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.