தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு!
8 தமிழக தென் மாவட்டங்களில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் மணிக்கு 35-45 கிலோ மீட்டர் மற்றும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் கூறப்பட்ட இதர விவரங்கள்:
வரும் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு. 20ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகள், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னை அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருக்கிறது. தெற்கு அந்தமான் அருகே இருக்கும் கடல் பகுதிகளில் 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடந்த ஓரிரு தினங்களில் தமிழகத்தில் லேசான மழை பதிவாகி இருப்பதாகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அந்த அளவு மழை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.