ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை: அவர் இல்லாமல் நடக்க இருக்கும் ராஞ்சி மெகா இண்டியா பேரணி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசமாட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்னா மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று ராகுல் காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ராஞ்சியில் இன்று ஒரு மெகா இண்டியா பேரணியும் நடைபெறுகிறது. "ராகுல் காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் தற்போது டெல்லியை விட்டு வெளியேற முடியாது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ராஞ்சி பேரணியிலும் சத்னா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்ற பிறகு உரையாற்றுவார்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியின் மெகா இண்டியா பேரணி
சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்களின் போஸ்டர்கள் ராஞ்சியில் மெகா பேரணிக்காக ஒட்டப்பட்டுள்ளன. கார்கேவைத் தவிர, சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் ராஞ்சியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.