மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளன: ஜெர்மனியில் ராகுல் காந்தி காட்டம்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனிக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றுகையில், இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தியாவின் சுதந்திரமான அமைப்புகள் அனைத்தும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். "நமது நாட்டின் உளவு அமைப்புகள், அமலாக்கத்துறை (ED) மற்றும் சிபிஐ (CBI) ஆகியவை அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த அமைப்புகளிடம் பாஜகவுக்கு எதிராக ஒரு வழக்கு கூட இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினர் மீது மட்டும் நூற்றுக்கணக்கான அரசியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் முறைகேடு
தேர்தல் முறைகேடு புகார்கள்
சமீபத்தில் நடைபெற்ற ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்கள் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "ஹரியானா தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அங்கு தேர்தல் இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன." என்றார். "மகாராஷ்டிரா தேர்தல் நியாயமாக நடைபெற்றது என்று நாங்கள் கருதவில்லை. தேர்தல் ஆணையத்திடம் அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தோம், ஆனால் அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை," என்று தேர்தல் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரக் கொள்கை
"மோடியின் பொருளாதார மாடல் தோல்வி"
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்த ராகுல் காந்தி, பாஜகவின் பொருளாதார அணுகுமுறை முட்டுச்சந்திற்கு வந்துவிட்டதாகவும், அது இனி முடிவுகளை தராது என்றும் கூறினார். மேலும், இந்த கொள்கைகள் மக்களிடையே பெரும் சமூக பதற்றத்தை உருவாக்கி, ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளச் செய்யும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும் தொழிலதிபர்கள் மிரட்டப்படுவதாகவும், அவர்கள் மீது மத்திய அமைப்புகளைக் கொண்டு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி துணை அதிபர் லார்ஸ் கிளிங்பீல் மற்றும் முன்னாள் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, பிஎம்டபிள்யூ (BMW) கார் தொழிற்சாலைக்கும் சென்று உற்பத்தியில் இந்தியாவின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடினார்.