மக்களவையில் அதானி, அம்பானி பெயரை குறிப்பிட கூடாதென்றதும் A1, A2 என குறிப்பிட்ட பேசிய ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது உரையின் போது தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசியதால், மக்களவையில் திங்கள்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் உறுப்பினர்களாக இல்லாதவர்களைக் குறிப்பிடுவதைத் தடுத்து நிறுத்தியதால், ரேபரேலி எம்.பி., தொழிலதிபர்களின் பெயரைக் குறிப்பிடாமல் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்தார். அவர்களை A1 மற்றும் A2 எனக்குறிப்பிட்டார். இது மக்களவையில் சிரிப்பலையை உருவாக்கியது. மேலும், மத்திய பட்ஜெட் மீதான லோக்சபா விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, தற்போதைய அரசியல் ஏகபோகத்தின் நிலை, இந்த தொழிலதிபர்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என 'சக்கரவியூகம்' இந்தியாவைக் கைப்பற்றியிருக்கிறது என்று இந்து இதிகாசமான மகாபாரதத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி பேச்சு
மஹாபாரதம் பற்றி குறிப்பிட்டு பேசிய ராகுல்
ராகுல் காந்தி மகாபாரதத்தில் அபிமன்யுவை கௌரவர்களால் வஞ்சகமாக ஒரு 'சக்ரவ்யூகத்தில் சிக்கி வைத்து கொலை செய்த அத்தியாயத்தை குறிப்பிட்டார். தற்போது, நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல், மோகன் பகவத், கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய ஆறு பேர் இந்த சக்கரவியூகத்தின் மையத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க அனுமதிக்காத விதிகளை சுட்டிக்காட்டினார். கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வணிகங்களுக்கு பிரதமர் சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு க்ரோனி கேபிடலிசம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டினார்.