மோடி குடும்பப்பெயர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி
'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஜூலை-15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ்-மோடி அவதூறு வழக்கினை பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத்-நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்துவிட்டது
இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். ஆனால், அதற்கு குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை ஏற்று அவருக்கு நிவாரணம் வழங்கி இருந்தால், அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், அவரது எம்பி பதவியும் அவருக்கு திரும்ப கிடைத்திருக்கும். ஆனால், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம் , "அரசியலில் தூய்மை ஏற்படுவது என்பது காலத்தின் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தெளிவான முன்னோடிகளாக இருக்க வேண்டும். மேலும், அவரது தண்டனைக்கு தடைவிதிக்க நியாயமான காரணம் இல்லை." என்று கூறியது. இந்நிலையில், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.