பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி
அசாமின் சமூக சீர்திருத்தவாதி துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி இன்று அசாமின் நாகோனில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு உள்ளூர் எம்.பி மற்றும் எம்.எல்.ஏவை தவிர, வேறு எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஹைபோராகானை(கோவிலில் இருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் எல்லை) தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் உள்ளூர் தெய்வத்திற்கு வணக்கம் செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அனுமதி பெற்றிருந்தும் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர் தற்போது கூறியுள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதா?
தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "நாங்கள் கோவிலுக்கு செல்ல விரும்புகிறோம். கோவிலுக்கு செல்ல முடியாத அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "நாங்கள் எந்த பிரச்சனையையும் உருவாக்க விரும்பவில்லை. நாங்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய விரும்புகிறோம் அவ்வளவு தான்" என்று அவர் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற கவலையை காரணம் காட்டி, 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'க்கான பாதையை மறுபரிசீலனை செய்யுமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது தேவையற்ற போட்டியை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் சர்மா நேற்று கூறினார்.