காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (52) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை துவங்கினார். தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா என பல மாநிலங்களை கடந்து நடைபயணமாக தமது யாத்திரையை தொடர்ந்து வருகிறார். விரைவில் அவர் ஜம்மு காஷ்மீரில் தனது யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, வரும் 25ம்தேதி காஷ்மீரின் பனிஹால் பகுதியில் தேசிய கொடியை ஏற்றவுள்ள ராகுல் காந்தி, அனந்தநாக் மாவட்டம் வழியாக பயணம் மேற்கொண்டு அடுத்த 2 நாட்களில் ஸ்ரீ நகரை அடையவுள்ளார். இந்நிலையில் இவரது ஸ்ரீ நகர் பயணத்தின் பொழுது, அவருடன் வெகு சிலரே அவரோடு பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிய ராகுல் காந்தி
அங்கு சில பாதைகள் பதற்றம் நிறைந்தது என்பதால், அங்கு மட்டும் ராகுல்காந்தி நடைப்பயணத்தை தவிர்த்து காரில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் 150 நாட்கள் நடைபயணம் 3750கிமீ தூரத்தை கடந்து வரும் 28ம்தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து 30ம்தேதி இவர் தலைமையில் ஸ்ரீநகரில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இவர் இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை நிறைவு செய்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த மாதம் ராகுல்காந்தி தனது பாதுகாப்பை யாத்திரையின் பொழுது உறுதிசெய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி, அவருக்கு தற்போது Z+பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு பாதுகாப்பில் அவரை சுற்றி 24 மணிநேரமும் 8-9 கமாண்டோக்கள் பாதுகாப்பிற்காக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.