முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது
உளவு பார்த்த குற்றத்திற்காக 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான, இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 8 வீரர்களும் கத்தாரின் உளவு அமைப்பால், அந்நாட்டிற்கு எதிராக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து, கத்தார் அதிகாரிகள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை. கடற்படை வீரர்களின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. நீதிமன்றம் அவர்களுக்கு தூதரக அணுகல் வழங்கியதை தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்படையில் 20 வருடம் பணியாற்றிய வீரர்கள்
கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்த் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் அவர். மேலும், இவர்கள் அனைவரும் கடற்படையில் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை, பணி அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், "நீதிமன்ற தீர்ப்பு ரகசியமானது. கத்தார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, எங்கள் சட்டக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது." "அனைத்து சட்ட வழிகளையும் கருத்தில் கொண்டு, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" எனக் கூறியிருந்தது.