அதிமுக கூட்டணியில் பிளவு: 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 43 வேட்பாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களைக் கூறுவதாகக் கிருஷ்ணசாமி சாடினார். தான் நேரில் சென்றும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வைகைச்செல்வன் ஆகியோர் தனது இல்லத்திற்கு வந்தும் பேச்சுவார்த்தை நடத்தியதை அவர் உறுதிப்படுத்தினார். இறுதியில் 5 தொகுதிகள் வரை இறங்கி வந்தும் அதிமுக உரிய மதிப்பளிக்கவில்லையெனக் குற்றம் சாட்டினார். 21 மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்வே இதற்குப் பின்னால் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
பண்ணையார் தனமும், புறக்கணிப்பும்:
தேர்தல் வியூகம் மற்றும் வேட்பாளர்கள்
அதிமுகவினரின் 'பண்ணையார் தனம்' மற்றும் சாதிய மேலாதிக்கம் காரணமாகவே தனது கட்சி ஒதுக்கப்பட்டதாக அவர் காரசாரமாகத் தெரிவித்தார். கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி விண்ணப்பித்துத் தனிச் சின்னத்தில் களம் காண உள்ளதாகத் தெரிவித்தார். 2024 தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தனது கட்சியின் பலம் குறையவில்லையெனத் தரவுகளுடன் விளக்கினார். புதிய தமிழகத்தின் இந்தப் பிரிவு அதிமுகவின் 'ஆட்சி கனவை' நிரந்தரமாகத் தகர்க்கும் எனக் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார். "பணமோ, மதுவோ இன்றி நேர்மையாக மக்களைச் சந்திப்போம்" என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.