புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்
மே 19 அன்று இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தனது போர்ஷே மூலம் அடித்துக் கொன்ற மைனர் பையன், விபத்து நடந்த இரவில் தான் அதிகமாக குடிபோதையில் இருந்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். விசாரணையின் போது, அனைத்து சம்பவங்களும் தனக்கு முழுமையாக நினைவில் இல்லை என்று அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சாட்சியங்களை அழித்தது தொடர்பாக, அந்த 17 வயது சிறுவனின் பெற்றோரான ஷிவானி அகர்வால் மற்றும் விஷால் அகர்வால் ஆகியோரை ஜூன் 5 வரை போலீஸ் காவலில் வைக்க புனே நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்த சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புனே போர்ஷே விபத்து விசாரணையில் நடந்த குளறுபிடிகள்
புனேவில் செல்வாக்கு மிக்க தொழிலதிபரின் மகனான அந்த மைனர் பையன், மே 19 அன்று புனேவின் கல்யாணி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மீது காரை ஏற்றி கொன்றான். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த சிறுவன் குடிபோதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் நடந்தன. அதை உண்மையாக்குவதற்கு அவனது இரத்த மாதிரிகள் கூட மாற்றப்பட்டன. விபத்திற்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் அந்த சிறுவன் மது அருந்துவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆனால், அந்த சிறுவன் மது அருந்தவில்லை என்பதை நிரூபிக்க அவனது ரத்த மாதிரிகள் மாற்றப்பட்டது. இதற்காக மருத்துவர்களுக்கு அந்த சிறுவனின் தந்தை லஞ்சம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.