தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருத்து முகாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழகத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை(03.03.2024) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்த விரிவான வழிகாட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் செயல்பட்டிலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டுமருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், மீண்டும் முகாம் நாளில் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்த முகாமில், பச்சிளம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். அதேபோல, இந்த நாளில் போலியோ சொட்டு மருந்தை இலவசமாக வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையம் போன்ற இடங்களில், பயண வழி மையங்கள் (Transit Booths) மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.