செம்மண் நிறமாக மாறிய புதுச்சேரி கடற்கரை
புதுச்சேரி கடற்கரை சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையாகும். இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை கடந்த 2 நாட்களாக மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று(அக்.,17) காலை முதல் கடற்கரையின் ஓர் பகுதி மட்டும் சிறிது தூரத்திற்கு செம்மண் நிறத்தில் மாறியுள்ளது. ஆனால் மற்ற பகுதிகள் எப்பொழுதும் போல் நீல நிறமாகவே காட்சியளித்தது என்று கூறப்படுகிறது. இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், பலர் ஆச்சர்யத்துடன் அப்பகுதியினை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வந்தனர். கடலின் இந்த திடீர் மாற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
நிறம் மாற்றம் குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவல்
புதுச்சேரி தலைமைச்செயலகம் எதிரே, 1.கிமீ.,தூரத்திற்கு குருசுகுப்பம் என்னும் பகுதி வரை கடல்நீரின் நிறத்தில் மாற்றம் காணப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து பொதுமக்கள் பலரும் திடீரென கூடியதால் சிறிது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் கேட்டதற்கு, 'ஆரோ பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் அங்குள்ள செம்மண் மேடான பகுதிகள் உடைந்து மணல் சரிந்து, அந்த செம்மண் கலந்த நீரானது கடலில் கலந்திருக்க கூடும்' என்றும், 'கடல் நீரினை விட செம்மண் நீர் அடர்த்தி அதிகம் என்னும் காரணத்தினால், அந்த செம்மண் நிறம் கடலில் தனியாக தெரிகிறது' என்றும் கூறினர். மேலும், அந்த செம்மண் அலைகள் மூலம் கடற்கரையில் தங்கும் பட்சத்தில் மீண்டும் பழைய நிறத்திற்கே கடல்நீர் மாறிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.