புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
புதுச்சேரியிலும் தமிழகத்தில் போல் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் முருகேசன் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதில், ஆதார் கார்டு அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெற பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசின் சேவைகள் அனைத்தும் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பெற முடிகிறது. இதன் பேரில், தற்போது ஆதார் எண்ணை புதுச்சேரி மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆதார் எண் இணைப்பதோடு, வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை போன்றவையும் இணைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தள முகவரி மற்றும் கால கெடு விரைவில் அறிவிக்கப்படும்
இதனையடுத்து இந்த ஆதார் எண் இணைப்பிற்கு இணையதள முகவரி மற்றும் காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 3 லட்சத்து 50ஆயிரம் வீட்டுமின் இணைப்புகளும், 56 ஆயிரத்து 500 வர்த்தக பயன்பாடு இணைப்புகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இது தவிர விளக்கு திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் இணைப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் இணைப்புகளின் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழிமுறைகளில் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு இது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் மின்சாரத்துறை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி கெடுக்காலம் இம்மாதம் 15ம்தேதி வரை மட்டுமே என்று தமிழக அரசு திட்டவட்டமாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.