புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் இவைதான்; திட்டக்குழு தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப் பெண்' திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களின் பட்டியலை மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ளது. 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. மாநிலத் திட்டக்குழு வெளியிட்ட மே 2023 ஆய்வறிக்கையின்படி, புதுமைப் பெண் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்டபோது, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 2,30,820 மாணவிகள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருந்துள்ளனர்.
மாவட்டங்கள்
முதல் ஐந்து மாவட்டங்கள்
இந்த திட்டத்தின் கீழ் அதிக பயனடைந்த முதல் ஐந்து மாவட்டங்களான சேலம், நாமக்கல், தருமபுரி, சென்னை, திருவண்ணாமலை ஆகியவை உள்ளன. கோயம்புத்தூர் இப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும், ஈரோடு, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள கிராமப்புற மாணவிகளின் கல்லூரிச் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது இத்திட்டத்தின் சமூகத் தாக்கத்தை உறுதி செய்கிறது. கல்லூரி மாணவிகள் வேறு எந்தக் கல்வி உதவித்தொகை பெற்றாலும், இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹1,000 பெறலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். பயனாளிகளில் 45% பேர் அரசு கல்லூரிகளிலும், 28% பேர் சுயநிதிக் கல்லூரிகளிலும் பயில்வதாக மாநிலத் திட்டக்குழு தெரிவித்துள்ளது.