இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் சுமார் 2 லட்சம் புகார்கள் மட்டுமே பெறப்பட்ட நிலையில், தற்போது அது 21 லட்சமாகப் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அரசுத் துறைகளில் உள்ளக் குறைபாடுகளைப் பொதுமக்கள் எளிதாகத் தெரிவிக்க 'சிபிஜிஆர்ஏஎம்எஸ்' (CPGRAMS) என்ற டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மக்கள் இப்போதுத் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் அல்லது ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்ய முடிகிறது.
தீர்வு
புகார்கள் தீர்க்கப்படும் வேகம்
புகார்கள் குவிந்தாலும், அவற்றைச் சீராகத் தீர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பெறப்பட்டப் புகார்களில் 95 சதவீதத்திற்கும் மேலானவை தீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு புகாரைத் தீர்ப்பதற்கானச் சராசரி நேரம் தற்போது 13 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 30 நாட்களுக்கும் மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புகார்களைத் தீர்க்கும் முறையை மேலும் நவீனப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஒரே மாதிரியான புகார்கள் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்கவும், எந்தத் துறையில் அதிகப் பிரச்சனைகள் உள்ளன என்பதைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார்தாரர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் புகார் சரியான முறையில் தீர்க்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய கருத்துத் தெரிவிப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பலன்
கடைக்கோடி மனிதனுக்கும் பலன்
வரிசையில் நிற்கும் கடைசி மனிதனையும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தளம் இயங்குவதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் முதல் மாநில அதிகாரிகள் வரை அனைவரும் இதில் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓய்வூதியம் தொடர்பானப் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் புகார்கள் அதிகரிப்பது என்பது அரசின் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பையும், தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.