வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
தண்டனை விபரம்
தனிநபர்களுக்கான தண்டனைகள் மற்றும் அபராதம் உயர்வு
2024 ஆம் ஆண்டின் பழைய சட்டத்தின்படி, வினாத்தாள் கசிவில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்த சட்டத்தின்படி, குறைந்தபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் அபராதத் தொகையும் அதிகபட்சமாக ₹50 லட்சம் வரை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
நிறுவனங்கள்
தனியார் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கான கடும் கட்டுப்பாடுகள்
தேர்வுகளை நடத்தும் தனியார் சேவை நிறுவனங்கள் அல்லது ஏஜென்சிகள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவற்றுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகை ₹1 கோடியிலிருந்து ₹5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தவறிழைக்கும் நிறுவனங்களைத் தேர்வு நடத்தும் பணிகளிலிருந்து நீக்கி வைக்கும் காலம் 4 ஆண்டுகளிலிருந்து 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
₹10 கோடி அபராதம்
கும்பலாக செய்யப்படும் குற்றங்களுக்கு ₹10 கோடி அபராதம்
திட்டமிட்டு கும்பலாக நடத்தப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் குறைந்தபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ₹1 கோடியிலிருந்து ₹10 கோடி வரை அதிரடியாக உயர்த்தப்பட்டு சட்டப் பிரிவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விசாரணைக் காலம்
2 மாதத்தில் விசாரணை மற்றும் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்
புதிய மசோதாவின் மிக முக்கியமான அம்சம், வினாத்தாள் கசிவு வழக்குகள் அனைத்தையும் காவல்துறை அல்லது சிறப்புப் பணிக்குழு 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பதாகும்.
வழக்கு விசாரணையை விரைவுபடுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.