Page Loader
புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்
புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவி தற்கொலை

புவனேஸ்வரின் பிரபல பல்கலைக்கழத்தில் நேபாள மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2025
07:10 pm

செய்தி முன்னோட்டம்

புவனேஸ்வரில் உள்ள பிரபல கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KIIT) நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பல்கலைக்கழக மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை போராட்டங்கள் வெடித்தன. இறந்த மாணவி ஒரு மாதத்திற்கு முன்பு அளித்த புகார்களின் மீது நிர்வாகம் செவி சாய்காததை அடுத்து அந்த மனைவி இந்த முடிவை எடுத்ததாக மாணவர்கள் கூறினர். திங்கள்கிழமை காலை KIIT பல்கலைக்கழகத்தின் (நிகர்) நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரிக்கு முன்னால் உள்ள முக்கிய சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை 

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக மாணவர் ஒருவர் கைது

தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட மாணவன் அத்விக் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டுள்ளதாக புவனேஸ்வர் துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்தார். இறந்து போன மாணவி, பல மாதங்களாக ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் நேபாள மாணவர்கள் முழுமையான விசாரணையைக் கோரினர் மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக் கோரினர்.

பதற்றம்

மாணவர்களிடையே அதிகரித்த பதற்றம்; நேபாள மாணவர்கள் வெளியேறும்படி உத்தரவு

பல்கலைக்கழகத்தில் பதற்றம் அதிகரித்ததால், KIIT பல்கலைக்கழகம் அனைத்து நேபாள மாணவர்களையும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "நேபாளத்தைச் சேர்ந்த அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி இன்று பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசிய KIIT பல்கலைக்கழக பதிவாளர் ஞான ரஞ்சன் மொஹந்தி, பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவருடன் உறவில் இருந்ததாகக் கூறினார். "அவர் விடுதியில் தங்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார். அவரது அறை சீல் வைக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர்," என்று மொஹந்தி கூறினார்.

வெளியேற்றம்

அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

நிலைமையைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம், நேபாள மாணவர்கள் உடனடியாக விடுதிகளை காலி செய்து வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. "நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேபாள மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது" என்று பல்கலைக்கழகம் மேலும் கூறியது. எனினும், நேபாள மாணவர்கள் எந்த பயண ஏற்பாடும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர். "எங்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் அல்லது எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை. எங்களை விடுதி பேருந்துகளில் ஏற்றி, கட்டாக் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விரைவில் எங்கள் வீடுகளுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டது. ஊழியர்கள் விடுதிக்குள் நுழைந்து, விரைவாக வெளியேறாதவர்களைத் தாக்கினர்," என்று நேபாளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கூறினார்.